பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.
பருத்திவீரன் புகழ்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செவ்வாழை ராசு பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து வந்தவர். அவருக்கு வயது 70. அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற “செவ்வாழை ராசு” பாரதிராஜாவின் “கிழக்கு சீமையிலே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆழ்ந்த இரங்கல்
செவ்வாழை ராசு கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விஜய்யின் வேலாயுதம் படம் தான் இவருக்கு நூறாவது படம் என்றும் இதுவரை 200 படங்களில் இவர் நடித்துள்ளதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவரது மறைவு செய்தியை கேட்ட திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை கூறி வருகின்றனர்.