தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பதியது யார் என்று தெரியும் என பிரபல நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
மிரட்டல் கடிதம்
கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய கிச்சா சுதீப், பல படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ்பெற்றவர் கிச்சா சுதீப். “நான் ஈ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். பாகுபலி, புலி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் கிச்சா சுதீப். இந்நிலையில் இவரது மேனேஜர் ஜாக் மஞ்சுவுக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் கிச்சா சுதீப்பின் தனிப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டல் விடுக்கப்படிருந்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து கிச்சாவின் மேனேஜர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற புட்டனஹள்ளி காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 504, 506 மற்றும் 120 (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜகவுக்கு பிரச்சாரம்
இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த கிச்சா சுதீப், தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் எனத் தெரியும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக பவர் பேசியதாவது; “சினிமா துறையில் உள்ள ஒருவரிடம் இருந்து தான் எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அவர்களுக்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பேன். எனது கடினமான நேரங்களில் என் பக்கம் நிற்பவர்களுக்கு நான் என்றும் ஆதரவாக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இன்று பிரபல அரசியல் கட்சி ஒன்றில் இணைவார் என தகவல் வெளியானது. அதற்கு விளக்கம் கொடுத்துள்ள கிச்சா சுதீப், “எந்த கட்சியில் இருந்தும் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, பாஜகவுக்காக மட்டுமே பிரச்சாரம் செய்வேன். தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என விளக்கம் கொடுத்துள்ளார்.