சில தினங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன், தனக்கு பிசிஓஎஸ் என்ற நோய் தாக்கம் இருப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து ஸ்ருதிஹாசன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது; சில நாட்களுக்கு முன்பு எனக்கு பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நோய்குறி இருப்பதாக தெரிவித்திருந்தேன். அதற்கு நான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ, தீவிர பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவோ பொருளல்ல. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு இந்தப் பிரச்சனை ஒருவருடமாக இருக்கிறது. உங்களின் அக்கறைக்கு நன்றி. இவ்வாறு ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.












































