நடிகர் சூர்யாவின் அறிக்கையை கொண்டு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென ஓய்வுபெற்ற நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சூர்யா அறிக்கை
நீட் தேர்வு மீதான அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் ஒரு மாணவி, 2 மாணவர்கள் என 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று என எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையிலும், மத்திய அரசு விடாப்பிடியாக இருந்ததால், அத்தேர்வு நேற்று நடந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது; ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை – எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியான ஏ.பி சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
நடவடிக்கை எடுக்க வேண்டாம்
இதற்கு சூர்யா ரசிகர்களும், நீட் தேர்வுக்கு எதிராக இருப்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன் உள்ளிட்டோர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; ‘‘நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை. 3 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர்கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை’’ எனத் தெரிவித்துள்ளனர்.















































