விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலின் பார்ட் 2 புரொமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்

ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்துகொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது. சமீபத்தில் ஆல்யா – சஞ்சீவ் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார் ஆல்யா மானசா.

இவர் தான் ஹீரோ!

‘ராஜா ராணி’ சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது ஆல்யா மானசா புது சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த சீரியல் ஷூட்டிங்கிற்கு பூஜை போட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதனைதொடர்ந்து அந்த சீரியலின் புரொமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதனைப்பார்த்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த சீரியல் ‘ராஜா ராணி’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஆக வெளிவரவுள்ளது. ஆல்யா கணவர் சஞ்சீவ் ‘காற்றின் மொழி’ என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். முதல் பாகத்தில் சஞ்சீவ் ஜோடியாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் சித்து சித்தான் ஹீரோவாக நடிக்கிறார்.

எதிர்பார்ப்பை கூட்டும் கதை

பொதுவாக ஒரு சீரியலின் இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தில் இருந்து ஏதாவது ஒரு முடிச்சை பிடித்துக்கொண்டு, அதிலிருந்து தொடர்ந்து எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் அல்லது அந்த சீரியலின் முடிவில் இருந்து தொடர்ந்து கதை வரும். ஆனால், இந்த சீரியல் மொத்தமும் வேறொரு கதைக்களத்துடன் இருக்கின்றது. பிரவீன் பென்னட் இயக்கும் இந்த சீரியலில், ஸ்ரீஹரி, சுதர்சன், பிரவீனா, லலிதா பாய் மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், ஐபிஎஸ் ஆர்வலராக இருக்கிறார் ஹீரோ. ஆனால் அவர் இனிப்பு கடை ஒன்றை வைத்திருக்கிறார். அம்மா பேச்சை தட்டாத, பாசம், மரியாதை வைத்திருக்கும் மகனாகவே இருக்கிறார் ஹீரோ. ஆனால், அவரது அம்மா வருங்கால மருமகள் தனது மகனை மட்டுமே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார். கதையின் நாயகியான ஆல்யா, ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறார். அவருக்கு அவரது அப்பாவும் ஆதரவாகவே இருக்கிறார். ஹீரோ அம்மா பக்கமா?, மனைவி பக்கமா? யாருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் போகிறார்? என்பது தான் கதை. பார்ப்பதற்கு புரொமா நன்றாக இருந்தாலும், இந்த கதையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் வந்துவிட்டதாக ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here