போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் நள்ளிரவில் தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது, விசாரணை
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், மருந்துகள் பயன்படுத்தியதாக கூறி பிரபல கன்னட நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரான ரவிஷங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ராகினி திவேதி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் மீது போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராகினி மீது போலீசார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். விசாரணைக்கு ராகினி ஒத்துழைக்கவில்லை என்றும் சாக்குப் போக்குகளைச் சொல்லி அவர் நாட்களை கடத்தியதாகவும் கூறப்பட்டது. மேலும் ஒவ்வொரு முறையும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விசாரணையை தவிர்க்கும் ராகினி, அவர் கலந்துகொண்ட பார்ட்டிகளைப் பற்றி கேட்டால் தனக்கு ஏதும் தெரியாது என்றும் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
லாக்-அப்பில் சண்டை
இதனிடையே, போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். ராகினி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சிசிபி அலுவலகத்தில் இருக்கும் லாக்-அப்பில் ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணியளவில் விளக்கு அனைப்பது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதைப் பொருள் எப்படி கிடைத்தது, யார் யாருக்கு சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து நடிகைகள் இருவருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.