இந்திக்கு திணிப்புக்கு எதிராக இணையத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
அவமதிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்.பி. கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறனும் இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதேபோல இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம் என்று ஆயூஷ் அமைச்சக செயலாளர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
டி-சர்ட்டுடன் பிரபலங்கள்
இதற்கிடையே, பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், I am a தமிழ் பேசும் indian என்ற வாசகம் அமைந்துள்ள டி-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அவருடன் அருகில் இருக்கும் நடிகர் மெட்ரோ ஹீரோ ஷிரிஷ், இந்தி தெரியாது poda என்ற டி-சர்ட்டை அணிந்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதேபோல் நடிகர் சாந்தனு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இந்திக்கு திணிப்புக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ள டி-சர்ட்டை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும், #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதேபோன்று #Tamil என்ற ஹேஷ்டாக்கும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.