சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள 5,330 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதாவது 43 நாட்களுக்கு பிறகு மே மாதம் 7ந் தேதி தமிழகத்தில் உள்ள 4,550 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.170 கோடிக்கும், 2-வது நாளில் ரூ.140 கோடிக்கும் மது வகைகள் விற்பனையாகின. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற உத்தரவுப்படி மே 9ம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டது. அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், மே மாதம் 16ந் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 800 மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படாமலேயே இருந்தது.
சென்னையில் மதுக்கடைகள் திறப்பு
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்தது. அதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பாதுகாப்புடன் வரிசையில் நிற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுவாங்க வருபவர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க தரையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல், கடையின் அருகில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் கவுன்டர் அருகே அனுமதிக்க வேண்டும். காட்டன் கையுறை, முகக்கவசம் அணிந்து பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். கடையின் சுற்றுபுறத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.