ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பிசிசிஐயின் விதிமுறைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி
ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு, இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. டி20 போட்டி முதலில் மார்ச் 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட லாக்டவுன் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டின் போட்டி அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுதிப்படுத்தியது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கை!
கொரோனா பாதிப்பு தொடர்பாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெற்கொள்ள பிசிசியை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு வீரரும் 3 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் வரை, சக வீரர்களை பார்க்க அனுமதி இல்லை எனவும் முதல் ஒரு வாரத்திற்கு வீரர்கள் தனிமையில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி ஆனாலும், வீரர்கள் பொதுவான இடத்தில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் 5 நாட்களுக்கு ஒருமுறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை அரைமணி நேரம் முன்னதாக தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.