சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர்களுடன் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஜூலை 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

படிப்படியாக குறைவு

அப்போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டார். தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும்  அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். நியாய விலைக்கடை மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும் என்றும் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். காய்ச்சல் முகாம்களால் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மேலும் அவர் கூறுகையில்; சென்னையில் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகளை இயக்கலாம். வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். கடைகளுக்குச் சென்றால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here