பிரான்ஸில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின. 

ரபேல் விமானங்கள்

ஐரோப்பிய நாடான பிரான்ஸிடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க நான்கு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் ஆகும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன. நேற்று முன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் ரபேல் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன. பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு இன்று மதியம் 1.30 மணியளவில் இந்திய வான் எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நுழைந்தன. அதன்பின் இரண்டு Su-30MKIs விமானங்கள் படைசூழ கம்பீரமாக அம்பாலா நோக்கி ரபேல் பயணத்தைத் தொடர்ந்தது.

உற்சாக வரவேற்பு

மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் ரபேல் விமானங்கள் பாதுகாப்பாக தரை இறங்கின. அங்கு ரபேல் விமானங்களுக்கு தண்ணீர்ப் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமானப்படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார். கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரபேல் விமானங்களை இயக்கி தாயகம் எடுத்து வந்தனர். இரட்டை எஞ்ஜின் கொண்ட இந்த விமானங்களை போர்க் கப்பல்களில் எளிதாக தரையிறக்க முடியும். கடும் குளிரிலும் இயக்க முடியும். 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து சென்று தாக்க முடியும். 1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்தியப் படையில் சேர்க்கப்பட்டன. 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ராணுவ வரலாற்றில் இது மற்றொரு மைல்கல் நிகழ்வு ஆகும். தங்க அம்புகள் என்ற படைப் பிரிவில் புதிய ரபேல் விமானங்கள் இயங்க உள்ளது. இந்நிலையில், ரபேல் விமானத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என புகழாரம் சூட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here