ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து நிலத்தை உழுத சம்பவத்தை அறிந்த இந்தி நடிகர் சோனு சூட் அவருக்கு டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.
தவிக்கும் விவசாயிகள்
நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாலும், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். இதனால், நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல இன்னல்களை கடந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பொருளாதார நெருக்கடியில் தவித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மாடுகளுக்கு பதில் தனது இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்துார் மாவட்டம் மஹால் ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்த அவரது தொழில், கொரோனா ஊரடங்கு காரணமாக நசிந்து போனது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் திணறி வந்த அவர், தனது கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட திட்டமிட்டார்.
உதவிக்கரம் நீட்டிய நடிகர்
விவசாயம் செய்ய உழவு மாடுகள் வாங்க பணமில்லாமல் தவித்த நாகேஸ்வர ராவ், தனது இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்து மன வருத்தம் அடைந்த இந்தி நடிகர் சோனு சூட், அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இதுதொடர்பாக சோனு சூட் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த மகள்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு, இந்தி நடிகர் சோனு சூட் புதிய டிராகடர் ஒன்றை வாங்கி தந்து அசத்தியுள்ளார். நேற்று மாலை அந்த விவசாயியிடம் டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் சோனு சூட்டின் இந்த செயல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரபாபு நாயுடு பாராட்டு
நடிகர் சோனு சூட்டின் இந்த நடவடிக்கைக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாகேஸ்வர ராவ்வின் குடும்ப சூழ்நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட்டிற்கு மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயியின் இரு மகள்களின் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.