வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நீலகிரி மாவட்டம் தேவலா ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கன்னியாகுமரி புதான் அணை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் காற்று மணிக்கு சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிர கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 முதல் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது.