ஊரடங்கு நிலை தொடர்ந்து நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரம்
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் மே 17-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14, 183 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1694 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஊரடங்கு நீடித்தால் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் அழிந்துவிடும்
இதுகுறித்து பேசிய அவர், ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதல்வர்களைக் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு கொடுக்க வேண்டும். மே 17க்குப் பிறகு ஊரடங்கு நிலை நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என நாராயணசாமி கூறியுள்ளார்.