திருவள்ளூர், மதுரை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை பெய்யும்
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுவதாக தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறினார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் பாலசந்திரன் குறிப்பிட்டார். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு தானியங்கி மழைமானியில் 20 செ.மீ மழையும், கீரனூர், அரக்கோணம், டேனிஷ்பேட்டை பகுதிகளில் தலா 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் விரிஞ்சிபுரம், செய்யூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் தலா 12 செ.மீ, சென்னை விமான நிலையம், ஆலந்தூர், புதுக்கோட்டை, பெருங்கலூர் பகுதிகளில் தலா 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை வடக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள், கடலோர கர்நாடக, லட்சதீவு பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.