சாந்தனு நடிக்க இருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காத்திருக்கும் சாந்தனு
‘மாஸ்டர்’, ‘ராவணக் கோட்டம்’ படங்களை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார் நடிகர் சாந்தனு. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போலவே ‘ராவணக் கோட்டம்’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளது. மேலும், இந்தக் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது யூடியூப் சேனலில் குறும்படம், தந்தை பாக்யராஜின் பேட்டி என பல வீடியோக்களை வெளியிட்டு வரவேற்பைப் பெற்று வருகிறார் சாந்தனு.
“முருங்கைக்காய் சிப்ஸ்”
இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாந்தனு. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாகும் அப்படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க உள்ளனர். மேலும் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாக இருக்கும் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புதுமணத் தம்பதியரின் முதல் இரவில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவை திரைக்கதையாக அமைத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீஜர்.