தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் நமீதா, கெளதமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவில் நமீதா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நமீதாவும் ஒருவர். முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், தனக்கென தனி ரசிகர் கூட்டதையே வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நமீதா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவிலிருந்து ஒதுங்கியிருந்த நமீதா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
மக்களுக்கு உதவ வேண்டும்
தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றும் அதற்காகவே பாஜகவில் இணைந்ததாகவும் நமீதா கூறியிருந்தார். பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பது என் மனதில் எப்போதுமே இருப்பதாக கூறிய அவர், அதோடு சேர்த்து இப்போது விலங்குகள் நலனுக்காகவும் பாடுபடப் போகிறேன் எனவும் தெரிவித்திருந்தார். நாட்டின் வளர்ச்சி, பெண்கள் நலன், குழந்தைகள், கல்வி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி செய்து வருவதாகவும் நமீதா குறிப்பிட்டிருந்தார்.
நமீதாவுக்கு பொறுப்பு
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார். திமுகவில் இருந்து விலகிய வி.பி. துரைசாமியை தமிழக மாநில துணைத் தலைவராகவும், பொதுச் செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத் தலைவராகவும் அவர் நியமித்துள்ளார். மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக பால் கனகராஜூம், மாநில செயலாளராக இருந்த கே.டி. ராகவன் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.