நான் துளிகூட நல்லவன் கிடையாது என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும், ஆண்டிரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் தள்ளிப்போயுள்ளது. லாக்டவுன் நேரத்தில் ‘மாஸ்டர்’ படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்காதா? என்று விஜய் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லவன் கிடையாது

அவர்களது ஏக்கத்தை போக்கும் வகையில், ‘மாஸ்டர்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சில தகவல்களை விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மாஸ்டர் படத்தில் நான் வில்லன்தான், ரொம்ப கொடூரமான வில்லன், துளி கூட நல்லவன் கிடையாது” எனத் தெரிவித்துள்ளர். தனக்கு அதுபோன்ற படம் நடிக்க ஆசை இருந்ததாகவும், ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் அது நிறைவேறியிருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த கருத்து, அவரது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் விஜய் சேதுபதியின் வில்லன் கேரக்டர் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிகச்சிறந்த நடிகர்

பயங்கரமான வில்லனாக நடிப்பது விஜய் சேதுபதிக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். முன்னதாக வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதுவது போன்று இருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதை வைத்துப்பார்த்தால், விஜய்க்கு வெயிட்டான வில்லனை தான் தயார் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று தோன்றுகிறது. கூத்துப் பட்டறையில் நடிப்பை பயின்று, புதுப்பேட்டை, குருவி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, இயக்குநர் சீனு ராமசாமியின் தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் தனித்திறமையை வெளிப்படுத்தி, கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தையும், நல்ல பெயரையும், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் ரசிகர் கூட்டத்தையும் பெற்று, தற்போது ‘மக்கள் செல்வனாக’ கொடி கட்டிப் பறக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here