புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

படுகொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, திடீரென காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், கிளவிதம்மம் ஊரணிப் பகுதியில் இறந்த நிலையில் தலை மற்றும் கை பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு, இந்த கொலை சம்பந்தமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய போலீசார் இளைஞர் ஒருவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் கண்டனம்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று அனைவரும் கொந்தளித்து வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அந்தக் குழந்தை முக கவசம் எல்லாம் போட்டுவிட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருக்கு… கெடுத்து கொன்னுட்டீங்களே… இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தை பெத்து போட்டத நினைச்சாலே நெஞ்சு பதறுது என தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில், என்ன கொடுமை நடக்கிறது. மற்றொரு குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இதுதான் நாம் வாழும் உலகம். நாம் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்க வேண்டியவர்கள் தான். அதற்குத் தகுதியானவர்கள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இன்னும் எத்தனை ஹாஷ்டேக் போடணும்”

சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் கவினும் இந்த சம்பவதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்னும் எத்தனை ஹாஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்க வேண்டும், இன்னும் எவ்ளோ போராடனும், அந்த குழந்தை மாஸ்க்கை போட்டுட்டு சிரிச்சுட்டு ஒரு போட்டோல, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல, நல்லா இருப்பீங்களா டா நீங்க எல்லாம், ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றத விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன்லா பயப்படுற மாதிரி. இந்த தப்பெல்லாம் செய்றவன் பயப்படணும் தானே. அதுக்காகவாவது ஒரு சட்டம் பொறக்கக்கூடாதா என்று தனது மனவலியை கூறியிருக்கிறார். இதேபோல், தமிழில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால், நடிகைகள் அதுல்யா ரவி, சாக்ஷி அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சாய்பல்லவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here