மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
‘லூசிஃபர்‘
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கிய முதல் படம் லூசிஃபர். 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையைப் பெற்றதற்கு முக்கிய காரணம் உச்ச நட்சத்திரமான ’மோகன்லால்’ இதில் நடித்தது தான். இதற்குமுன் பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், மோகன்லாலின் தங்கையாக முக்கிய வேடத்தில் நடித்தார். மலையாள ரசிகர்கள் எல்லோரும் லூசிஃபரின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில், இந்த அறிவிப்பு தெலுங்கு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு ரீமேக்
மலையாளத்தில் மோகன்லால், மஞ்சு வாரியருக்கு இணையாக தெலுங்கில் சிரஞ்சீவி – விஜயசாந்தி ஜோடி பிரபலம். லூசிஃபர் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை விஜயசாந்தி மறுத்த காரணத்தால், அது அடுத்த இடத்தில் இருந்த சுஹாசினி மணிரத்னத்திற்கு சென்றது. மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தை வெகுவாக ரசித்ததாக சுஹாசினி தெரிவித்துள்ளார். நீண்ட அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு பெரிய பொருட்செலவில் சிரஞ்சீவி நடித்த வரலாற்றுப் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ எதிர்பார்த்த அளவு வசூல் செய்யாததால் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அரசியல் பின்னணியுள்ள கதை, இரண்டாம் பாகமும் வர வாய்ப்பு உள்ளது என்பதால் சிரஞ்சீவியின் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிகளை இது முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரீமேக்கில் சொதப்புவது எப்படி
மலையாளத்தில் ஒரு கதாநாயகன் 4 பேரை அடித்தால் அதுவே தமிழ் படமாகும்போது ஹீரோ பத்துபேரை புரட்டியெடுப்பார். அதே படம் தெலுங்கிற்குப் போனால் பத்து 50 ஆகும் அபாயம் உள்ளது. ரமணா, கத்தி உள்ளிட்ட ரீமேக் படங்களை மெகா ஸ்டாரின் மாஸ் அப்பீலுக்கு ஏற்றவாறு மாற்றி எடுத்தார் முருகதாஸ். ஆனால் லூசிஃபரை இயக்கப் போவது சாஹோ புகழ் சுஜித் என்பதுதான் கொஞ்சம் அடிவயிற்றில் புளியைக் கறைக்கிறது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரன் ‘Konidela Production Company’ என்ற குடும்ப பேனரில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.