பிரபல நடிகை பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்த நான்கு பேரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஜாதி தான் தடை
நடிகை பூர்ணா கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். இவர் தமிழில் கடைசியாக ராம் இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். பூர்ணாவை திருமணம் செய்துகொள்ளக் கோரி அவரது பெற்றோர்கள் பலமுறை வற்புறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய நடிகை பூர்ணா, ‘‘என் அம்மா என்னுடைய திருமணம் பற்றி தினந்தோறும் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இதில் ஜாதி தான் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதையும் தாண்டி திருமணம் பேச வருபவர்கள், நான் சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அப்படியே காதலித்தாலும் அங்கும் இதுபோல எதிர்பார்க்கத்தானே செய்வார்கள். நடிப்பு ஒரு தடையாக இருக்கும் இந்த விஷயத்தால் தான் என் திருமணம் கால தாமதமாகிறது’’ என்றார் பூர்ணா கூறினார்.
டிக் டாக் மாப்பிள்ளை
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்ட ஒருவர், பூர்ணாவுக்கு டிக் டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் அவர் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சிலமுறை அவர்கள் செல்போனில் உரையாடியதாகத் தெரிகிறது. சில நாட்களுக்குப் பிறகு அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று டிக் டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சென்றதும் ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்த பூர்ணாவின் பெற்றோர், வீட்டில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்தபோது அதில் அவர்கள் பூர்ணாவின் வீடு, கார், வெளிப்புறப் பகுதி ஆகியவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது.
மிரட்டல், கைது
இதுகுறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது, அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்தி பூர்ணாவிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நகைக்கடை அதிபர் என்றதும் நடிகை பூர்ணா டிக்டாக்வாசியிடம் சிக்கி ஏமாந்துவிட்டார் என்பது போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.