வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற மர்மம் நீட்டித்து வரும் நிலையில், அவர் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வாதிகாரி
கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பொறுப்பு வகித்து வருகிறார். உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில், ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.
தொடரும் மர்மம்?
இதற்கிடையே, அதிபர் கிம் ஜாங் உன் சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதன்பின் அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அறுவை சிகிச்சை செய்து கொண்ட கிம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
நிகழ்ச்சியில் அதிபர்?
கிம் ஜாங் உன் குறித்து கடந்த 20 நாட்களாக எந்த ஒரு தகவல்களும் கிடைக்காத நிலையில், அவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வடகொரிய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலையை அதிபர் கிம் ஜாங் உன் நேற்று நேரில் வந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்ச்சி நடைபெற்றதையோ, அதில் அதிபர் கிம் பங்கேற்றதையோ உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவையோ வடகொரிய அரசு செய்தி நிறுவனம் ஆதாரமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















































