கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ. 25 லட்சம் செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சம்
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் பணியில் மத்திய – மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலகினரும் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதுடன், தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதி உதவிகளை அளித்துள்ளனர்.
நிவாரண நிதி
அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். இதுதவிர தூய்மை பணியாளர்களுக்கு உதவுவதற்காக தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
வங்கிக்கணக்கில் பணம்
இந்த நிலையில், லாரன்ஸின் அறிவுறுத்தலின் பேரில் தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதன்முலம் 3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டர் வாயிலாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.