கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல, வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் கொரோனா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் தற்போது இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பிச் செல்கின்றனர். பலர் வேலையை இழந்துள்ளனர். இப்படி கொரோனாவால் வாழ்க்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொரோனா விழிப்புணர்வு
கொரோனாவின் அச்சத்தால் கிட்டதட்ட 3 மாதங்களாக உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி அறிக்கை
ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; “கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், எனது உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும். உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மாஸ்க் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!” என்று அவர் தெரிவித்துள்ளார்.