தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செயப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வழக்கு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15ந் தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
அவசர ஆலோசனை
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
பொதுத்தேர்வு ரத்து
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மாணவ – மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்துக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.
தேர்வின்றி தேர்ச்சி
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண்ணும், பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20% மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.