சிவப்பழகு விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் வெட்கமே இல்லாமல் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுப்பதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார்.
படுகொலை
அமெரிக்காவில் கடந்த 25ம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்ற இளைஞர் போலீஸ் அதிகாரிகள் பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
கங்கனா சாடல்
இனவெறியால் நடந்த இந்த படுகொலைக்கு பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தமன்னா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்காக அவர்களை கடுமையாக சாடி உள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
வெட்கம் இல்லையா?
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; இந்திய நடிகர் – நடிகைகள் பலர் சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு, வெட்கமே இல்லாமல் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு என்ன துணிச்சல் பாருங்கள்.
சிவப்பழகு விளம்பரம்
சிவப்பழகு விளம்பர நிறுவனங்களுடன் கோடிக்கணக்கில் பேசி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். இதை பற்றி யாரும் ஏன் கேட்பது இல்லை. இங்கு இனவெறி வேரூன்றி உள்ளது. சாதாரண ஒரு கதாபாத்திரத்துக்கு கூட கருப்பான தோற்றம் கொண்டவரை நடிக்க வைக்க மறுத்து விடுகின்றனர். எனது சகோதரி மாநிறம். முக அழகு விளம்பரத்தில் நடித்தால் அவரை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும். அதனால் நான் எந்த முக அழகு விளம்பரத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இவ்வாறு கங்கனா கூறினார்.