பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் தனது கணவரான மொஹ்சின் அக்தர் மிர்ரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
திருமணம்
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்து வளர்ந்த பிறகு ஹீரோயின் ஆனவர் மும்பையை சேர்ந்த ஊர்மிளா மடோன்கர். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் நடித்தவர். ரங்கீலா, சத்யா போன்ற இந்திப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ஊர்மிளா தொழிலதிபரும், மாடலுமான காஷ்மீரைச் சேர்ந்த மொஹ்சின் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஊர்மிளாவை விட 10 வயது சிறியவர் மொஹ்சின். ஊர்மிளாவுக்கு 50 வயதாகிறது. மொஹ்சினுக்கு 40 வயது.
விவாகரத்து
திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், மொஹ்சின் அக்தர் மிர்ரிடம் இருந்து விவாகரத்து கேட்டு, நடிகை ஊர்மிளா மடோன்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த ஊர்மிளா, மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். அவர் அரசியல் பக்கமும் சென்றுள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஊர்மிளா தற்போது சிவசேனா கட்சியில் இருக்கிறார். ஊர்மிளா, மொஹ்சினின் பிரிவு பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.