பிரிந்து கிடக்கும் அதிமுகவை விரைவில் ஒன்று சேர்ப்பேன் என வி.கே.சசிகலா தெரிவித்திருக்கிறார்.

மலர்தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா இன்று (ஜன.,17) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் உட்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஒன்றுபட வேண்டும்

அந்த வகையில் தனது இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; “இப்போது தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சியால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். திமுகவை வீழ்த்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரிந்து கிடந்த அதிமுக முன்பு, எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதேபோல் தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவை விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன்.

சும்மா போக முடியாது

நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று போட்டி போட்டுக்கொண்டு கட்சியையும், தொண்டர்களையும் மறந்துவிட்டதாக அதிமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். கட்சி பிளவுபட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்திய பெரிய நன்றிக்கடன்” என்று கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here