கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச.,12) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை

நாளை (டிச.,13) மற்றும் நாளை மறுதினம் (டிச.,14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேகமூட்டம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 – 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 – 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மழை பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ., ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2 செ.மீ., குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), மாஞ்சோலை (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது”. இவ்வாறு வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here