நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளினி கழுத்தில் மாலை போட்ட விவகாரம் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளான நிலையில் தற்போது அவர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பரபரப்பு
காமெடி நடிகரான கூல் சுரேஷ் தொடர்ந்து ஊடக வெளிச்சத்திற்காக எதையாவது செய்து சர்ச்சைகளில் சிக்கி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மன்சூர் அலிகானின் புதிய படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வைத்து பெண் தொகுப்பாளினியிடம் கூல் சுரேஷ் அத்து மீறியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ள ‘சரக்கு’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் மன்சூர் அலி கான். கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, பழ.கருப்பையா, ரவி மரியா, மதுமிதா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
சர்ச்சை
இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் கூல் சுரேஷ் மேடையில் பேசி கொண்டிருந்த போது தனக்கு போடப்பட்டிருந்த மாலையை எடுத்து தனக்கு அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு அவரது அனுமதி இல்லாமலே அவர் கழுத்தில் போட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த தொகுப்பாளினி கடும் கோபம் அடைந்தார். அந்த மேடையிலே மாலையை கழட்டி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் ஒரு பெண்ணிடம் இப்படி எல்லாம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா என பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனையடுத்து “நான் தெரியாமல் செய்துவிட்டேன். மன்னிச்சுக்கோங்க தங்கச்சி என கூறினார் கூல் சுரேஷ். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வர, கூல் சுரேஷின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மன்னிப்பு
இந்த நிலையில், நடிகர் கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது; “பொதுவாவே நடக்குற நிகழ்ச்சிகள் கலகலப்பா இருக்கனும்னு நினைக்கிறவன் தான் இந்த கூல் சுரேஷ். நேற்றும் அப்படிதான் விளையாட்டுதமா பண்ணது விபரீதமாகிடுச்சு. அடுத்தவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இந்த சம்பவம் நடந்தது எனக்கு மனசு தர்ம சங்கடமாயிடுச்சு. அந்த பெண்ணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்குறேன். அதேபோல பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.