காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இண்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
நாளை (ஜூன் 18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் மழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 – 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
பரவலாக மழை
கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), புலிப்பட்டி (மதுரை) தலா 2 செ.மீ., ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1 செ.மீ மழை பாதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று (ஜூன் 17) முதல் 21 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.