நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயல்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; “நேற்று (மே 10) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே 11) காலை “மோகா” புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு – தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன்பிறகு நாளை (மே 12) காலை முதல் வடக்கு – வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு 13 ஆம் தேதி மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14 ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.

கனமழை

இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (மே 12) முதல் 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

லேசான மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here