திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நோட்டீஸ்

திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 15 நாட்களுக்குள் அவர் எங்களிடம் வழங்கவில்லை என்றால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், “திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக நான் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வீடியோவை நீக்க வேண்டும். நஷ்டஈடாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திக்க தயார்

இந்த நிலையில், திமுகவினரின் சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இதற்கு முன்னர் பிஜிஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு ரூ.500 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கை, திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக ரூ.100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை என் மீது திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள், ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here