ஆரம்ப காலத்தில் இருந்தது போல் இப்போது சினிமா துறை இல்லை என்று நடிகை மதுபாலா கூறியுள்ளார்.

ரோஜா ஹிட்

தமிழில் அழகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை மதுபாலா. அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி, மலையாள மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த மதுபாலா, ரோஜா படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடித்தார். 90களில் நடிக்க துவங்கிய நடிகை மதுபாலா, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் தேஜாவு என்ற படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்ட மதுபாலா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமா துறையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

பிடித்த கதை அமையவில்லை

சினிமாத்துறையை பற்றி நடிகை மதுபாலா கூறி இருப்பதாவது, “நான் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில், சினிமாவில் ஆண், பெண் வித்தியாசம் நிறைய இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அலியா பட் போன்ற பல கதாநாயகிகள் சினிமா துறையை முழுவதுமாக பெரிய அளவில் மாற்றிவிட்டார்கள். சினிமாவில் இப்போது கதாநாயகன், கதாநாயகியை சமமாக பார்க்கும் நிலை இருக்கிறது. நான் கதாநாயகியாக நடித்த காலத்தில் சில அற்புதமான படங்களில் நடித்தேன், நல்ல பாடல்கள் அமைந்தன, நடனம் ஆடினேன், காதல் காட்சிகளில் நடித்தேன், பல மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தேன், என் மீது எந்தவித புகார்களும் இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள் வராததால் திருமணம் செய்து கொண்டு சினிமா துறையை விட்டு விலக முடிவு செய்தேன். இந்தியில் ஆக்சன் ஹீரோக்களான அக்ஷய்குமார், சுனில் ஷெட்டி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்து இருக்கிறேன்” என்று மதுபாலா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here