எஜமான் வானவராயன் போல் மாப்பிள்ளை வேண்டும் என ரசிகை ஒருவர் அப்போது எழுதிய கடிதம் ஒன்று தற்போது டிரெண்டாகி வருகின்றது.

டாப் ஹிட் லிஸ்ட்

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எஜமான். இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, ஐஸ்வர்யா, நெப்போலியன், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட்டான இந்த திரைப்படமானது இன்றும் ரஜினியின் டாப் ஹிட் லிஸ்ட் படங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தை ஏவிஎம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினிகாந்த் எஜமான் படத்தில் வானவராயன் என்ற கதாபாத்திரத்திலும், மீனா வைத்தீஸ்வரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தனர்.

மாப்பிள்ளை வேண்டும்

எஜமான் படம் வெளிவந்த சமயத்தில் படத்தை பார்த்த திலகவதி என்ற ரசிகை, எஜமான் படத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்தின் வானவராயன் கதாபாத்திரத்தை பெருமளவு ரசித்ததாகவும், அதேபோல் மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கடிதம் ஒன்று எழுதி ஏவிஎம் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது, “வணக்கம் சார்!, நான் செல்வி ஏ.திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள் உடனே கழுத்தை நீட்டுகிறேன். சார் சீக்கிரம் சொல்லுங்கள், நான் திருமணம் செய்து கொண்டு திரும்பவும் முதலில் என் கணவரோடு பார்க்கும் படம் எஜமானாக தான் இருக்க வேண்டும். வெள்ளித்திரையில் அழியா கதை படைத்துவிட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்திவிட்ட திரு. உதயகுமார் அவர்களுக்கு வைர கிரீடம் தான் சூட்ட வேண்டும். இக்கதையால் பல எஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைதீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது உறுதி. நன்றி இப்படிக்கு செல்வி ஏ.திலகவதி” என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை ஏவிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. தற்போது இக்கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here