ஆளுநருக்கு அழுத்தம் உள்ள காரணத்தால்தான் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை திருப்பி அனுப்பும் நிலைப்பாட்டை எடுத்து இருப்பார் என்று நினைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

காலம் தாழ்த்தியது ஏன்

சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “ஆன்லைன் ரம்மி அவரச சட்டத்திற்கும், சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதற்கு காலம் தாழ்த்தியது ஏன் என்று தெரியவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தி இதை திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர், அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநரின் உரிமை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம், விளக்கம் கேட்கலாம், திருப்பி அனுப்பலாம்.

அழுத்தம் உள்ளது

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டுவர, சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என எந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் கூறினார் என்று தெரியவில்லை. சட்டமன்றம் புனிதமானது, மான்பு உடையது, மக்களால் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு களங்கம் ஏற்படும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம். இந்த சட்ட முன்வடிவை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று கொண்டு வரவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துதான் இது கொண்டு வரப்பட்டது. இதை எல்லாம் ஆளுநர் பார்த்திருக்க வேண்டும். ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு எதிராக உள்ளார். எங்கிருந்து, என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. ஆளுநருக்கு அழுத்தம் உள்ள காரணத்தால் இந்த நிலைப்பாடு எடுத்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன்” இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here