இயக்குநரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி – தோல்வி

தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ஜி.எம்.குமார். கடந்த 1986-ம் ஆண்டு பிரபு ஹீரோவாக நடித்த  அறுவடை நாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதையடுத்து, அடுத்த சில படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப வெற்றிக்குப் பிறகு பிட்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கினார். அதில் ‘உருவம்’ திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை இவருக்கு ஏற்படுத்தியதால், பின்னாளில் திரைப்படங்கள் இயக்குவதில் இருந்தே விலகினார்.

சிறந்த கதாபாத்திரம்

பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். அதனைதொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்த ஜி.எம்.குமார், இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குநர் பாலா இயக்கத்தில், ஆர்யா – விஷால் நடிப்பில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இவரது நடிப்புக்கு சில விருதுகளும் கிடைத்தது. திரைப்படத்தை தொடர்ந்து, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தீவிர சிகிச்சை?

இந்நிலையில் ஜி.எம்.குமாருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here