பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுவதாக தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வரவேற்பு

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு மற்றும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

புதிய ஆளுநர்

இதையடுத்து தமிழகத்தின் 26வது புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆளுநர் பெருமிதம்

பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழில் வணக்கம் எனக்கூறி பேசத் தொடங்கினார். மேலும் பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுவதாகவும், தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். தன்னால் முடிந்த அளவு தமிழக மக்கள், தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைப்பேன் எனவும் தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது எனக்கூறிய அவர், ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன் என்றார்.

திறமையான மனிதர்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, 1976ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார். சிபிஐ, மத்திய உளவுப்பிரிவுகளில் பணியாற்றியுள்ள அவர், 2018ல் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு நாகலாந்து ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.என்.ரவிக்கு, நாகலாந்து கிளிர்ச்சியர்களை அமைதி பாதைக்கு திருப்பிய பெருமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here