மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய மத்திய – மாநில அரசுகள், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளன. அதேசமயத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.

எச்சரிக்கை

வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நேற்று உத்தரவிட்டது. அந்த வகையில், மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் இலக்கு

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினசரி தலா 1.50 லட்சம் அபராதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதமும் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முறைக்கு மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here