தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர். அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் படிப்படியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதனைதொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில், கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினும், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். 

மீண்டும் ஸ்டாலின், முதல்முறை உதயநிதி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததையடுத்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அவரது மகனும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

ஓ.பி.எஸ். vs தங்கத்தமிழ்செல்வன்

காட்பாடியில் துரைமுருகன், நாகர்கோவிலில் சுரேஷ்ராஜன், ஆலந்தூரில் தா.மோ. அன்பரசன், திருக்கோவிலூரில் பொன்முடி, ஆலங்குளத்தில் பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், திருப்பத்தூரில் பெரியகருப்பன், குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு உள்ளிட்ட முன்னாள் அமைச்சகர்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வனும், கரூரில் செந்தில்பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

தலைவர்களுக்கு மரியாதை

முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்தின் முன் வேட்பாளர் பட்டியலை  வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களிலும் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here