தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் செல்வன்

எதார்த்தமான பேச்சாலும், அழகான சிரிப்பாலும் நம்மை கவர்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோக்கள் என்றாலே கோட்சூட் அணிந்துகொண்டு எப்போதும் கெத்தாக இருப்பது என்பது பல தரப்பிலும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. ஆனால் நமது பக்கத்து வீட்டுக்காரர் போல் எதார்த்தமான நடிப்பு, எதார்த்தமான பேச்சு மற்றும் அனைவரையும் கவரும் சிரிப்பு, அவரை மக்கள் மனதில் நிற்க வைத்திருக்கிறது. அந்த வகையில் கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, நான் மஹான் அல்ல, பலே பாண்டியா, சுந்தர பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தின் மூலம் மக்கள் அனைவரையும் தன் வசம் ஈர்த்தார் விஜய்சேதுபதி. அதன்பிறகு அவர் தொட்ட அனைத்தும் வெற்றிதான். சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹீரோ, வில்லன்

பல முன்னணி நடிகைகளுடன் நடிக்கும் விஜய் சேதுபதி தனது எதார்த்த நடிப்பால் நானும் ரவுடிதான், 96 போன்ற படங்களை வெற்றிப் படங்களாக மாற்றினார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகர்களுக்கும் ஆசை இருக்கும், அந்த வகையில் போலீஸாக நடித்து ‘சேதுபதி’ படத்தை நன்றாகவே கையாண்டார். தன்னால் ஹீரோவாக மட்டுமல்ல வில்லனாகவும் நடிக்க முடியும் என்று பல படங்களில் நடித்து நிரூபித்தவர் விஜய் சேதுபதி. பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், வில்லன் கதாபாத்திரத்திற்கு அருமையாகவே பொருந்துகிறார். ‘விக்ரம் வேதா’ படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் மக்கள் செல்வனாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் ஜொலித்து வருகிறார்.

வருத்தம்

இந்த நிலையில், தனது பிறந்தநாள் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கண்டனங்களும், கேள்விகளும் எழுந்தன. இதற்கு வருத்தம் தெரிவித்து விஜய்சேதுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here