போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகளுக்குள் மோதல் முற்றி வருவதால் சிறை அதிகாரிகள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
சரமாரி புகார்
கன்னட திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் இருக்கும் நடிகைகள் மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. நள்ளிரவு வரை புத்தகம் படித்துவிட்டு தூங்கவிடாமல் செய்வதாக நடிகை ராகிணி மீது சஞ்சனாவும், அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி செய்வதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று சஞ்சனா மீது ராகிணியும் மாறி மாறி சிறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைகலப்பு ஏற்படும் சூழல்
நடிகைகள் 2 பேரையும் சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினாலும், அவர்கள் தினமும் சண்டை போட்டு கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவர் இடையே சில நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சூழலும் நிலவுவதாகவும், அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராகிணி, சஞ்சனாவிடம் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு சென்ற பிறகுதான், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி முதலில் கைதானார். பின்பு தான் சஞ்சனா கைதாகினார். இதனால் ராகிணியால்தான், தான் கைதாக நேரிட்டதாக சஞ்சனா கூறுவதாக தெரிகிறது. சிறையில் நடிகைகள் மோதிக் கொள்ளும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.