வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவில்பட்டி, மதுக்கூர், திருத்துறைப்பூண்டி தலா 3 செ.மீ., பட்டுக்கோட்டை, எட்டயபுரம், காரியாபட்டி தலா 2 செ.மீ., சாத்தூர், நெய்வாசல் தென்பதி, மணமேல்குடி, வெம்பக்கோட்டை அணைக்கட்டு, பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம், கந்தர்வகோட்டை, முத்துப்பேட்டை தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.