சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் 10 செ.மீ., தேவகோட்டை 9 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் 8 செ.மீ., அரிமளம், அம்பத்தூர் தலா 6 செ.மீ., புதுக்கோட்டை, பள்ளிப்பட்டு தலா 5 செ.மீ., காரைக்குடி, வாடிப்பட்டி, மருங்காபுரி தலா 4 செ.மீ., ஈரோடு, வேடசந்தூர், சூளகிரி, உதகமண்டலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சுலாங்குறிச்சி தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.