வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துக்கோட்டை, தாமரைப்பக்கம், புழல், பூண்டி தலா 9 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மாம்பலம், பொன்னேரி, சென்னை விமான நிலையம் தலா 8 செ.மீ., ஆலந்தூர், பெரம்பூர், தரமணி, செம்பரபாக்கம், சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், திருத்தணி, தாம்பரம் தாலுகா அலுவலகம் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தெற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.