வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சருக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக தான் என்றும் நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுக தான் காரணம் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் பரிந்துரை
இதனையடுத்து மூன்றாவது தினமான இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார்.















































