ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு தடை கோரி ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக பிரபல நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ‘தலைவி’ திரைப்படம் இந்தியிலும் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இதேபோல் ‘குயின்’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இந்த இணையத் தொடரின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
தடைவிதிக்க முடியாது
இதனிடையே, தனது அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், ‘குயின்’ இணையதள தொடரையும் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கெளவுதம் மேனன் தனது இணையதள தொடரில் தீபா குறித்து எந்த கதாபாத்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், குயின் தொடருக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது. அதேபோல், ‘தலைவி’ படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனை கதாபாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.