27 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
பிளாக் பஸ்டர் ஹிட்
1993 ஆம் ஆண்டு கே.டி. குஞ்சுமோன் தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ஜென்டில் மேன்’. இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, எம்.என். நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் போன்ற பலர் நடித்திருந்தனர். தனது முதல் திரைப்படத்திலேயே எதார்த்தத்தின் உச்சத்தை தொட்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் பல விருதுகளை வாரி குவித்தது. தமிழில் இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன், காதல் என அனைத்தும் கலவையாகவே இப்படத்தில் கொடுத்துள்ளார் ஷங்கர்.
இரண்டாம் பாகம்
நல்ல வெற்றி பெற்ற திரைப்படங்களை இரண்டாம் பாகத்தை எடுப்பது இப்போது டிரெண்டாகவே மாறிவிட்டது. அந்த வகையில், ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதாக தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். கிட்டதட்ட இப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியிலும், வேலையிலும் ஈடுபட்டுள்ளனர். ஜென்டில்மேன் படத்தைவிட அதன் இரண்டாம் பாகம் மிக அதிக செலவிலும், பிரம்மாண்டமாகவும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திலும், நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘ஜென்டில்மேன் 2’ படத்தில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கே.டி குஞ்சுமோன் சூரியன், காதலன், ரட்சகன், காதல் தேசம் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.