திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தோவாலா 13 செ.மீ., பந்தலூர் 9 செ.மீ., ஸ்ரீ பெரும்புதூர், பொன்னை அணை, தாமரைப்பக்கம் தலா 7 செ.மீ., போளூர், மணலூர்பேட்டை, கொரட்டூர் தலா 5 செ.மீ., திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மூங்கில்துறைப்பட்டு, நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.