போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை ராகினி திவேதிக்கு எவ்வித சலுகைகளும் கொடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
நடிகை கைது
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், மருந்துகள் பயன்படுத்தியதாக கூறி நடிகை ராகினி திவேதியை போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரான ரவிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ராகினி திவேதி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் மீது போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நடிகை சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் காவலில் வைத்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும் தெரிகிறது. கன்னட தயாரிப்பாளர் சிவபிரகாஷ் முதல் குற்றவாளியாகவும், ராகினி திவேதி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சலுகைகள் இல்லை
போலீஸ் காவலில் இருக்கும் நடிகை ராகினிக்கு எந்த சலுகைகளும் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை இரவு ராகினிக்கு சாம்பார் சாதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை காலையில் இட்லி, வடை, சப்பாத்தியும், மதியம் மற்றும் இரவில் சாம்பார் சாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. ராகினி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், சினிமா பிரபலங்கள் பங்குகொண்ட பார்ட்டிகளில் பிரபல தயாரிப்பாளர் சிவப்பிரகாசும், ராகினியும் போதைப் பொருட்கள் விற்றதை ஒப்புக்கொண்டதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.